Thursday, December 23, 2004

Songs for Political Action


Songs for Political Action: Folk Music, Topical Songs and the American Left 1926-1953

பிறநாடுகளைப் பொறுத்தமட்டிலே தனியே ஜனரஞ்சக துள்ளிசைமட்டுமே தம் இசைக்கூறு என்ற தோற்றபாட்டினைத் தந்திருந்தாலுங்கூட, அமெரிக்கக்கூட்டுமாநிலங்களின் இசையின் பரப்பு துள்ளிசைக்கு அப்பாலும் விரிந்ததும் ஆழமானதுமாகும். தமிழர்பின்புலத்திலே, தாலாட்டு முதல் ஒப்பாரி வரையென்று நாட்டுப்புறப்பாட்டுகளிலிருந்து சாமி, போர், தொழில் என்பவற்றின் கூறுகளை உள்ளடக்கி பாடலும் இசையும் உணர்த்து ஊடகமாகவும் ஊட்டமாகவும் ஊடாடியிருப்பதைப் போல சமாந்திரமான ஒரு சூழ்நிலையை அமெரிக்காவிலும் காணலாம்.

இருபதாம் நூற்றாண்டுத்தொடக்கத்திலிருந்து ஓர் ஐம்பது அறுபது ஆண்டுக்காலத்துக்கு, கறுப்பினத்தவர்களின் கதை ஆத்மார்த்த இசையாக (Soul Music) ஒரு புறமும் துயர்கூறும் மதம் சாரா ப்ளூஸாக (blues - ஆத்திரம்+அழுத்தம் இரண்டுக்குமே நீலநிறம் பொருந்தும்; ப்ளூஸ் இசை விற்பனர் பி. பி. கிங் சொல்வார், "“The blues is an expression of anger against shame and humiliation” ) மறுபுறமும் வெளியானது; அதே காலகட்டத்திலே, தொழிலாளர், பொருளாதாரத்திலே முன்னேற்றமடையாத வெள்ளைநிறத்தவர் பாடல்கள், ப்ளூக்ராஸ் இசையாகவும் (Bluegrass music - ப்ளூக்ராஸ் வளரும் பிரதேசம் அண்டிப்பிறந்ததாலே, இந்தப்பெயர்) என்ற விதத்திலும் அடுத்ததாக, நாட்டுப்புற இசையாகவும் (folk music) காணப்பட்டது. பொதுவாகவே இவ்விரண்டு குழுவினரினதும் கருப்பொருள், இசை ஆகியவற்றின் உருக்கி ஒட்டுதலிலும் கலத்தலிலும் அமெரிக்காவின் இடதுசாரி இசையாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியிலே ஒர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் அமைத்த பாடல்களிலே சிறந்த இருநூற்று தொண்ணூற்றாறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பத்து அடர்தட்டுகளாக இந்தத்தொகுதி வெளிவந்திருக்கின்றது. கூடவே, அமெரிக்க இடதுசாரிநாட்டிசையின் வரலாறும் முழுப்பாடல்களின் சாகித்யங்களும் தனித்தனியே அநேகமான இசையாளர்கள், உள்ளடக்கிய பாடல்களின் வரலாறும் அரிய நிழற்படங்களும் கொண்டு சிறந்த செறிந்த ஆவணமான 200 பக்கங்கள் உள்ள அகலப்புத்தகமும்.

இசைத்தட்டுகள் காலவரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன; கறுப்பினத்தவர்களை மரங்களிலே தூக்கிலிடல், தொழிற்சங்கங்களின் நிலையும் அவற்றிலே சேர்வதற்கான அழைப்பும், போருக்கெதிரான குரல், நாட்ஸிகளுக்கெதிரான குரல், அமெரிக்க அரசியலிலே இடதுசாரிகளுக்கான பிரசாரம் இப்படியான கலவைகளுடனான பாடல்கள். இவ்விசையாளர்களின் எழுச்சிக்காலமான பெருவழுத்தக்காலம் (great depression) தொட்டு முடங்கற்காலமான செனட்டர் ஜோஸப் மக்கார்த்தியின் 'கொம்யூனிஸ்ட் களையெடுப்பு' வரையான - பொதுவாக வெகுசன ஊடகங்கள் சொல்லாத - விரிந்த காலத்தின் வரலாற்றை இந்தப்பாடல்களும் உசாத்துணைநூலும் உணர்த்துகின்றன.


உவூடி குத்ரி

நாட்டுப்புற இசையிலே ஆழமாகக் கால் பதித்த உவூடி குத்ரியின் பாடல்கள் அதிகம் எண்ணிக்கையிலே இல்லாதபோதுங்கூட, இன்றைக்கும் நாட்டுப்புற (இடதுசாரி) இசையிலும் அதனூடான சமூகமாற்றத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் பீற் ஸீகரின் முன்னைய பாடல்கள் பல இதிலே அடக்கம் (குறிப்பாக, ஒரு அடர்தட்டு அவருடைய பாடல்களைமட்டுமே கொண்டிருக்கின்றது). அமெரிக்க நாட்டுப்புறப்பாடல்கள் தொடர்பாகப் பல இசைத்தொகுப்புகளைக் கேட்டிருந்தபோதுங்கூட, இந்த வகையிலே ஒரு சிறந்த ஆவணப்படுத்தல் கைவசப்பட்டது இதுவே முதற்றடவை. குறிப்பாக, முழுக்க முழுக்க நாட்டுப்புறப்பாடகர் இல்லாத, ஆனால், ஓரளவுக்கு கருத்தமைப்பிலே இரேக்கே பொப்மாலிக்கு முன்னோடி என்று எனக்குத் தோன்றுகின்ற உலோர்ட் இன்வேடர் (Lord Invader), பாடலாசிரியர் Richard Blakeslee போன்ற சிலரை அறிந்து கொள்ளவும் இந்தத் தொகுதி உதவியாக இருந்திருக்கின்றது.


பீற் ஸீகர்

விலைமட்டும் ஒரு விமர்சகர் சொல்லியிருப்பதுபோல, "சமூகத்திலே அடக்கப்பட்டோர், தொழிலாளர் குறித்த இந்த நூலை வாங்க, குடியரசுக்கட்சி முதலாளிகளால் மட்டுமே முடியும்;" பாட்டுக்கு ஒரு டொலர் என்ற விதத்திலே, முன்னூறு டொலரைச் சுற்றி விற்பனை. கைக்கடங்காதது தொகுதிமட்டுமல்ல, விலையுந்தான்.

தமிழிலே இப்படியான தொழிற்சங்கங்கள் அல்லது சமூக மாற்றங்கள் குறித்த இசைத்தட்டுகள் வரலாறுகூறும் விதமாக வந்திருக்கின்றனா தெரியாது. (இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் குறித்து பொதுவுடமை இயக்கங்கள் குறித்த பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றார் என்று வாசித்த ஞாபகம்; இதுபோல, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றோரின் பாடல்களும் உள்ளடக்கி ஓர் ஆவணப்பதிவோடு நூலும் இசைத்தட்டுத்தொகுதியும் இதுவரை வராதிருந்தால், இனியாவது வரவேண்டும்)

=================

தொகுதி: Songs for Political Action: Folk Music, Topical Songs and the American Left 1926-1953
தொகுப்பு: Ron Cohen & Dave Samuelson
இசைத்தட்டுகள் பத்து (746 நிமிடங்கள்) & நூல் (200 பக்கங்கள்)
வெளியீடு: Bear Family Records, 1996

Wednesday, December 22, 2004

துத்தம்

இசையைப் பற்றி மிஞ்சி மிஞ்சி என்னாலே சொல்லக்கூடிய கருத்து, "பிடிக்கிறது/பிடிக்கவில்லை." அதற்குமேலே, பாட்டின் கருத்து எனக்கு இசைவாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும். அவ்வளவுதான். இசையின் நாடி பிடித்துப் பார்க்கிற வம்புக்கு போகாதபோதும், இசைவரலாற்றுவழிபுக்கிப் புடுங்கிப் பூனைக்கு மயிர் சிரைக்கிற ஆர்வம் அவ்வப்போது துருத்துவதுண்டு.