Thursday, March 03, 2005

நா. எ. ஒ. சி.திபா -1

நானும் என்னை ஒட்டிக்கொண்ட சில திரைப்படப்பாடல்களும் -1

[கட்டில்லா உளறல் ஆரம்பம்]
இன்றைக்கு பாஸ்டன் பாலாஜியின் பதிவிலே அவர் கூறிய இரவும் பகலும் படத்தின் "இரவு வரும்" பாட்டிற்கான இணைப்பினை musicindiaonline இலே பெற முடிந்தபோது, அசோகன் அதே படத்திலே பாடின "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்" பாடலும் மேலுக்கு வந்தது. படங்களிலே பொதுவாக எம்ஜிஆரிடம் அடிவாங்கவென்றே தோன்றியதுபோன்றவர்களான மனோகர், நம்பியார், அசோகன் ஆகிய மூன்று பேரின் நடிப்புத் தொடர்பான உருச்சிறுத்துப்போன ஏனைய பக்கங்கள் புரட்டிப் பேசப்படாமலே இருக்கின்றன. மனோகரின் விடாப்பிடியான புராணநாடகமுயற்சிகள்; கதாநாயகனாக திரைப்பட உலகத்திலே ("திகம்பரசாமியார்"?) அறிமுகமான நம்பியாரின் எம்ஜிஆர் காலத்துக்குப் பின்னான பாக்கியராஜின் "தூறல் நின்னு போச்சு" படத்தின் "என் சோகக்கதையைக் கேளு தாய்க்குலமே" நகைச்சுவைப்பாத்திரம்.

அசோகனின் செய்கையிலே மறக்கமுடியாதது, அடிக்கடி அவர் மூடித்திறந்து செய்யும் கண்சிமிட்டல் என்றால், அவர் கெட்டவனாகத் தோன்றி குத்தி, வெட்டிச்சாய்க்காத படங்களிலே அவர் பாத்திரங்களோடு சம்பந்தப்பட்டு வந்த பாடல்களும் பொதுவாக எனக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன; இருக்கின்றன. (அவர் நல்ல வீரனாகத் தோன்றி, பிரகாஷ்ராஜ் மனைவி சாந்தியின் தந்தை ஆனந்தனும் சச்சுவும் கதாநாயகன் - நாயகியாக நடித்த வீரத்திருமகன் பாடல்கள் பிடித்திருந்தன. பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடல்கள் தனியே பேசப்படவேண்டுமென்பதாலே அவற்றினை இங்கே விட்டுவிடுகிறேன்). 'இரவும் பகலும்' படத்திலே அசோகனே பாடிய இந்த, "இறந்தவனைச் சுமந்தவனும்" [ http://www.musicindiaonline.com/p/x/KqIg1P3sogGfHDfOBitZ/ ] பிடித்துப்போனது, அதிலே சொல்லப்படும் கருத்துக்காக அல்ல, ஆனால், அவருடைய அந்த மாறுபட்ட குரலுக்காக. அவருக்காக, ஜெமினி நடித்த "பாதகாணிக்கை" படத்திலே ரி. எம். சௌந்தரராஜன் பாடின "வீடு வரை உறவு வீதி வரை மனைவி" [ http://www.musicindiaonline.com/p/x/3J7g1ARnyFGfHDfOBitZ/ ] இன்னோர் அருமையான பாடல்; இது போன்ற பாடல்கள் தத்துவத்தின் உச்சி, கோபுரம் என்றெண்ணிய காலம் கடந்தே இருபதாண்டுகள் போய்விட்டாலுங்கூட, அப்படியான பாடல்களிடம் பிடிபட்டுக்கொள்கின்ற தன்மை -ஏனென்று புரிந்துகொள்ளமுடியாதபோதுங்கூட, - இன்னும் விட்டுப்போகவில்லை; சிலவேளை ஆரம்பத்திலே கேட்கப்பட்ட காலத்தின் நல்ஞாபகத்தினைத் துகட்படுத்திக்கொண்டு அவை இருப்பதாலிருக்கலாம். அப்படியே இருந்துவிட்டும் போகட்டும்; காரணமல்ல இப்போது எனக்கு முக்கியம்; அவை பிடித்திருக்கின்றன என்பதே. இன்னொரு பாடல், எனக்குப் பிடித்த தமிழ்த்திரைப்பாடல்களிலே இரண்டாம் இடத்திலே இருக்கின்றதென்று எண்ணிக்கொள்ளும் (உணர்ந்துகொள்ளும் என்றும் சொல்லலாமோ?) வேதாவின் இசையமைப்பிலே [இவரும் தேவா மாதிரி உருவிக்கொள்கின்றவர்தானாமே?] வந்த வல்லவனுக்கு வல்லவன் படத்திலே அசோகனுக்காக சௌந்தரராஜன் பாடும் பாடலான, "ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" [ http://www.musicindiaonline.com/p/x/aV2gScWBdgGfHDfOBitZ/ ].

இந்தப்பாடல் மட்டுமல்ல, மொடேர்ன் தியேர்ட்டர்ஸின் ஜெயசங்கர் நடித்த "வல்லவம்" தோன்றும் ஜோன் வெய்ன், க்ளீன் ஈஸ்ற்வுட் வெஸ்ரேன் வகைத்தழுவற்படங்களிலும் உள்ள பாடல்களிலே சிலவும் மிகவும் பிடித்தவை ( "மனம் என்னும் மேடை மேலே" [ http://www.musicindiaonline.com/p/x/7A2gI7NE.-GfHDfOBitZ/ ], "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/IJIgDfKb2FGfHDfOBitZ/ ], "பளிங்கினால் ஒரு மாளிகை" [ http://www.musicindiaonline.com/p/x/OV2gHNvHN-GfHDfOBitZ/ ], "இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/ZV2gUOocfwGfHDfOBitZ/ ], "ஆசையா கோபமா" [ http://www.musicindiaonline.com/p/x/3qIghAajIwGfHDfOBitZ/ ] ). இவற்றிலே, ஓரிரு பாடல்களின் உள்ளர்த்தங்கள் ஒரு காலத்திலே ஓஹோ என்பதுவாகத் தோன்றி, இன்றைக்கு மிகவும் பிற்போக்காகத் தோன்றுகின்றவை; உதாரணமாக, "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்?" என்பது, அதிலே பெண்ணினை காத்திருக்கும் அவளின் காதலன் தாமதமாக வருவது குறித்துச் சந்தேகப்படுவதுபோலவும், அவள் தன் தாமதத்துக்கான காரணத்தினை "கவித்துவமாக" விளக்குவதாகவும் புரிந்து இரசித்ததுண்டு. வண்டு அவள் முகத்தினைப் பூவாகவும் கூந்தலை முகிலாவும் எண்ணிக்கொண்டதான பாடல்; இப்படியான "கவித்துவப்" பாடல்கள் சில முன்னர் அந்தக்காரணங்களுக்காகவே பிடித்திருந்தன (பார்த்தால் பசி தீரும் படத்திலே, சரோஜாதேவி-சிவாஜி இடையேயான, "கொடியசைந்ததும் காற்றுவந்ததா?" [ http://www.musicindiaonline.com/p/x/tq7g6V4N9FGfHDfOBitZ/ ] பாடல், நீலமலர்கள் படத்திலே கமலஹாஸன் - ஸ்ரீதேவிக்கு இடையேயான "இது இரவா? பகலா? பாடல்). ஆனால், இப்போதைய நிலையிலே இவற்றுக்காக காரணங்கள் பிடிப்பதில்லை; ஆனால், பாடல்கள் இன்னும் பிடித்திருக்கின்றன. "பளிங்கினால் ஒரு மாளிகை" பிடித்ததுக்கான காரணம், கருத்து அல்ல; அந்தக் கிறங்கடிக்கும் எல். ஆர். ஈஸ்வரியின் குரல்.

பொதுவாக எனக்குத் தமிழிலே பாடும் பெண்பாடகர்களின் குரல்களிலே வித்தியாசம் தெரிவதில்லை. (தொண்ணூறுகளின் பின்னாலே, வந்த பாடல்களிலே ஆண்களின் குரல்களிலேயும் வித்தியாசம் பிடிபடவில்லை; இந்த நூற்றாண்டுத்தமிழ்த்பாடல்களிலே பாடலே தமிழா வேறு மொழியா என்று புரிந்து கொள்ள முன்னாலே பாடல் முடிந்துவிடுகின்றது. படப்பெயர்களுக்குத் தமிழைப் புகுத்த நின்றாடும் ராமதாஸ், திருமாவளவன் போன்றோர், தமிழ்ப்பாடல்கள் புரியும்வண்ணம் பாடப்படவேண்டுமென்பதை முதற்றேவையாகப் பிடித்துக்கொண்டால் எவ்வளவு நல்லது! :-() ஆனால், எல். ஆர். ஈஸ்வரியின் குரலை மட்டும் இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவேன் (அவரின் பெயரை மறந்தாலுங்கூட :-))

ஈஸ்வரியும் ரி. எம். சௌந்தரராஜனும் சேர்ந்து பாடிய சில பாடல்கள், வழக்கமாக ஜோதிலக்ஷ்மி, ஜி. சகுந்தலா (சி. ஐ. டி. சகுந்தலா??), ஆலம் ஆகியோருக்கு "க்ளப்-காபரே (உ)டான்ஸ¤" பாடல்களுக்கு அவர் பாடும் துள்ளும் பாடல்களிலே இருந்து மிகவும் விலகி, என்னை வேறு மாதிரியாக அள்ளிக்கொண்டிருக்கின்றன. 'ஆலயமணி' படத்திலே "கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா?" [ http://www.musicindiaonline.com/p/x/h4OgMp7hT-GfHDfOBitZ/ ] , 'யார் நீ'யிலே "பார்வை ஒன்றே போதுமே?" [ http://www.musicindiaonline.com/p/x/prxgktVjngGfHDfOBitZ/ ], 'பச்சை விளக்கு' இலே, "பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/ ], "வானம்பாடி" இல் "ஏட்டில் எழுதி வைத்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/kVCgymama-GfHDfOBitZ/ ], 'சிந்து நதியின் மிசை நிலவினிலே' [ http://www.musicindiaonline.com/p/x/TUxg5c33N-GfHDfOBitZ/ ] கடைசியாக இந்தப்பதிவினை இன்றைக்கு எழுதும் வண்ணம் எனக்கு திரி வைத்து எண்ணெயும் நெருப்புமிட்ட, சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் இசையிலே தரிசனம் படத்திலே வரும், "இது மாலை நேரத்து மயக்கம்" [ http://www.musicindiaonline.com/p/x/8UQgDCC.YwGfHDfOBitZ/ ].

மாலை நேரத்து மயக்கத்தினை நான் கிட்டத்தட்ட ஒரு பதினைந்து ஆண்டுக்காலமாக கேட்க அலைந்திருக்கின்றேன். தமிழ்த்திரைப்படப்பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு எதுவென்று கேட்டால், இதுதான்; இதுவேதான்; ஆண்டு மறந்து போனாலுங்கூட, இதை முதல்முதலிலே கேட்ட இடம், நேரம் அனைத்தும் அப்படியே நினைவிலே நிற்கின்றது. போன கிழமை, பாஸ்டன் பாலாஜியின் பதிவிலேகூட, ரோசா வசந்த் தன்னிடம் இருப்பதாகச் சொன்னார். இன்று ஓர் எதேச்சைத்தேடலிலே கிடைத்திருக்கின்றது.

[/கட்டுண்டது இப்போதைக்கு இங்கு முற்று]

'05 மார்ச் 03, 19:51 கிநிநே.

1 பின்னூடுகை:

Blogger தமிழ்நதி said...

இருந்திருந்துவிட்டு குறிப்பிட்டதொரு பாட்டை கேட்கவேண்டுமென்று தாகம் வந்துவிடும். இன்றைக்கு அருட்டிய பாட்டு 'பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்'. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு உங்கள் பக்கத்தில் துத்தத்தில் பார்த்த நினைவில் வந்து சொடுக்கினேன்.கிடைத்தது. ஆனால்,அது 'பணம் படைத்தவன்'படத்தில் அல்லவா இடம்பெற்றது? 'மாலைநேரத்து மயக்கமும்' இந்தப் பாட்டும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.மிகவும் நன்றி.

7:47 AM  

Post a Comment

<< Home