Wednesday, May 25, 2005

சந்தனமேடை எம் இதயத்திலே...2


இந்தக்காலகட்டத்திலே வெளிவந்த இலங்கைப்பாடல்கள், ஒன்று துள்ளிசைப்பாடல்களாக இருந்தன அல்லது மெல்லிசைப்பாடல்களாக இருந்தன. இலங்கைத்தமிழர் வேண்டிக் கேட்ட மூன்றாவது வகைப்பாடல்கள், பக்திப்பாடல்கள். அவற்றின் சில, பக்திப்பாடல்கள் என்பதற்கப்பாலும் பிரசித்தி பெற்றவை. அவற்றிலே ஒன்று. இணுவில் வீரமணி ஐயர் யாத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடிய, "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே." புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறைகளின் சங்கீத, நடன அரங்கேற்றங்களிலே இது பொதுவிலே புகுந்துவிடும். வீரமணி ஐயரின் இந்தப்பாட்டு 70~80 களிலே வெளிவந்ததா என்று தெரியாது. அநேகமாக, 77 இன் பின் ஜே ஆர். ஐயவர்த்தனா ஆட்சியின் திறந்த பொருளாதார ஆரம்பத்தின்போது, தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கோவில்களின் திருவிழாக்களுக்கு ஆடம்பரச்செலவு செய்து, தமிழ்நாட்டுப்பாடகர்களை அழைப்பது வழக்கமானபோது, உருவாகியிருக்கலாம். இப்படியாக, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்மன் பாடல்களும் இருக்கின்றன. அந்த வரிசையிலே, "கோணேஸ்வரம் எனக்கு இராமேஸ்வரம்" என்ற பாடலுமிருந்தது. நிச்சயமாக, அகதியாகப் படகிலேறி ஓடி "இராமேஸ்வரம் எனக்குக் கோணேஸ்வரம்" என்று பாடும் நிலை வர முன்னாலே வந்த பாடல் இது.

இந்த ஈழத்துப்பாடல்கள் எனப்படும் மெல்லிசைப்பாடல்களை அவை இலங்கை வானொலியிலே தினமும் ஒலிபரப்பாகி நான் கேட்டிருக்கக்கூடிய என் பாடசாலைக்காலத்திலே விரும்பிக்கேட்கும் ஆர்வம் இருக்கவில்லை; அவை ஒலிபரப்பான, காலைச்செய்திக்கும் பொங்கும் பூம்புனலுக்கும் இடைப்பட பதினைந்து நிமிடங்களிலே காலை வகுப்பு-கோயில்-சாப்பாடு-பள்ளிக்கூடம் என்று ஓடும் நிலை இருந்தது மட்டும் காரணமல்ல; எல்லோரையும்போல தமிழ்த்திரைப்படப்பாடல்களின்மீது ஆர்வம் கவிந்திருந்ததுதான் முக்கியமாகும். ஆனால், இலங்கைப்பாடல்கள், ஒரு காலகட்டத்திலே வானொலியிலும் மக்களிடையேயும் இளையராஜாவினை ஒற்றியெடுத்த மோஹன்ராஜ்-ரங்கன் போன்ற இளம் இலங்கை இசையமைப்பாளர்களினாலே (மோஹன்ராஜின் தந்தை ரொக்சாமி எனப்படும் முத்துச்சாமி, முதன்முதலிலே, திருவனந்தபுரத்துக்கு அருகிலேயிருந்து, இலங்கையின் முதற்படத்துக்கு இசையமைப்பதிலே உதவ வந்து, இலங்கையிலேயே தங்கி இசையமைப்பாளர் ஆகிவிட்டவர். வி. பி. கணேசனின் படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர் என நினைக்கிறேன்) முழுக்க முழுக்கத் கோடம்பாக்கத்திரைப்படப்பாடல்களின் பதிவாகப் போனப்பிறகு, பழைய ஈழத்துப்பாடல்களிலே எண்பதின் பிற்பகுதியிலே ஒரு பிடித்தமுருவானது. சிலவேளை கடந்த காலத்திற்குரியதைப் பிடித்துக்கொள்வதால், அந்தக்காலத்தினை இரைமீட்டக்கூடிய ஓர் உளப்பாங்குதான் இதன் காரணமோ தெரியாது.

ஆனால், இப்பாடல்களிலே ஈடுபாடு உண்டான காலத்திலே அவற்றினைக் கேட்பதிலே சிக்கலுமிருந்தது; இப்படியாகப் பிடித்துப்போன, ஈழத்துப்பாடல்களை ஓர் இசைநாடாவாகவோ அல்லது இசைவட்டாகவோ பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒன்று இப்பாடல்கள் வானொலியிலே ஒலிபரப்பாகும்போது, ஒலிநாடாவிலே பதியவேண்டும்; அல்லது, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே யாரிடமாவது தொகுதியாகப் பெறவேண்டும். முதலாவது முறைப்படி, பாடலைப் பதியும்போது, பதிவுற்றதிலே விரும்பின பாடலைவிட மீதி அத்தனை சுற்றுப்புறச்சத்தங்களும் பதிந்ததால், வெறுத்துப்போனது; இரண்டாவது முறையிலே பெற வானொலிக்கூட்டுத்தாபனத்துக்குப் போனால், நாடிருந்த நிலையிலே வெலிக்கடை, பூஸா இராணுவமுகாங்களிலே கொண்டுபோய் அடைக்கப்படுவதுதான் குறைந்தபட்சத்தண்டனையாக இருக்கலாம் என்னுமாப்போன்ற நிலையிருந்தது.. ஆகவே, விரும்பிய பாடல்கள் கைவரப்பட முடியவில்லை. (இப்போது, இணையத்திலேகூட இவற்றிலே ஒரு பாடலையுங்கூடக் காணமுடியவில்லை.)

என்னைப் பொறுத்தமட்டிலே, ஈழத்துப்பாடல்கள் திருகோணமலையின் பரமேஸ்-கோணேஸ் சகோதரர்களுடன் ஆரம்பமாகின்றது. 1974 இலோ 1975 இலோ இவர்கள் தமது பாடல்களை ஒரு பாட்டுப்புத்தகமாக பெரிய அளவிலே வெளியிட்டார்கள்; ஆண்டு சரியாக ஞாபகமில்லை. இலங்கையின் துள்ளிசைப்பாடல்களும் அப்படியாக பாடற்புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரைப்படப்பாடற்புத்தங்கள் போல ஒரு படத்தின் பாடல்களும் அப்படக்காட்சிகள் அட்டையிலும் திரைக்கதைச்சுருக்கமும் "மீதி வெள்ளைத்திரையிலே காண்க" தொக்குநிற்றலுமில்லாமல், ஒரு தொகுப்பாக வந்திருந்தது. இதை எங்கள் வீதியும் + பரமேஸ்-கோணேஸ் ஆகியோரின் வீட்டுவீதியும் சந்திக்குமிடத்திலே அப்போதிருந்த வாணி புத்தகசாலையிலே காசு அங்குமிங்குமாகச் சேர்த்து வாங்கியிருந்தேன். பொதுவாக, பெண் குரலுக்கு, கோணேஸின் மனைவி, மாலினிதான் குரல் கொடுப்பாரென்று ஞாபகம். ஆனால், 1977~1979 இலே பரமேஸ்-கோணேஸ் இருவருக்கிடையிலும் பிளவு ஏற்பட்டு, அப்படியே இருவரும் வேறு வேறு திசைகளிலே போய்விட்டார்கள். நாங்கள் ஒரு நாள் தனியார் வகுப்பு முடிந்து வரும்போது, இசைக்கருவிகள் உடைபட்டு அவர்கள் வீட்டுவாசலிலே இருக்க, சண்டை நிகழ்வதைக் கண்டோம். அநியாயமான பிளவு அது. தற்போது, பரமேஸ் எங்கிருக்கின்றாரென்று தெரியவில்லை. ஆனால், கோணேஸ், கனடாவின் ITBC வானொலியினை நடத்திக்கொண்டிருப்பதாக இணையத்தினூடாக வாசித்தேன். பின்னால், இவர்களுடனிருந்த பஞ்சாட்சரம் போன்றோர் திருகோணமலையிலே மெல்லிசைக்குழுக்களை நடத்திக்கொண்டிருந்தாலுங்கூட, இவர்களினைப் போல, சுயமும் திறமையும் கொண்டிருக்கவில்லையென்றே கருதுகின்றேன். இக்காலகட்டத்திலே இக்குழுக்களிலே ரோபல் ராகல், தற்போது பொஸ்ரனிலே வதியும் லோகேஸ்வரன் போன்றோர் மெல்லிசைப்பாடகர்களாகவும் இருந்தார்கள்.

பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் பாடல்கள், தமிழ்நாட்டின் ஏ. எம். ராஜா, ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் முணுமுணுக்கும் குரல்களின் பாணியை ஒத்தும் சற்றே துள்ளிசைப்பாடல்களின் வேரினைக்கொண்டும் அமைந்த பாடல்களெனச் சொல்லலாம். துள்ளிசைப்பாடல்களின் ஆரம்பகாலச்சாயல் எனும்போது, பைலா வகையான பாடற்சாயல் கொண்டவை அல்ல; பைலா பாடல்களின் தாக்கமில்லாதவை என்றே கேட்கும்போது தோன்றுகிறது.

இவர்களின் பாடல்கள் என நான் எண்ணிக்கொண்ட பாடல்கள் (சிலவறறினை நிச்சயமாக இவர்களுடையதா எனச் சொல்லமுடியவில்லை)

1. உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது?
2. தங்கமேனி கன்னம் தாமரைப்பூ
3. என் ராஜா இது நியாயந்தானா? (தேனாடும் பூவில் தானாடும் வண்டு)
4. அழைக்கும் ஓசை கேக்கவில்லையா?
5. நீ வாழுமிடமெங்கே? எந்தன் பார்வை விழும் அங்கே
6. முத்துக்கிண்ணக் கன்னத்திமேல் பத்துப்பத்து முத்தங்கள்
7. நீ இன்றி நிலவு ஏன் வந்ததிங்கு?
8. பாடல் எனக்கிது முதற்றரந்தான்
9. போகாதே தூரப் போகாதே; தாங்காதே நெஞ்சம் தாங்காதே
10. சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம்
11. அன்று தேடினேன்; இன்று பாடினேன்
12. மனமாளிகை ரோஜா! மணம் வீசுது இலேசா
13. கொஞ்சிக்கூவும் சிட்டே என் சேதி சொல்வாயோ?
14. நெஞ்சைத் தொட்டுப் பேச வந்த கொஞ்சும் பாவையே
15. தக்காளிப்பழத்துக்கும் தளதள உடம்புக்கும் வித்தியாசம் இல்லையடி பாப்பா (??)
16. எழுதுகிறேன் பாட்டு; இனிய தமிழ் கேட்டு

* இங்கே பரமேஸ்-கோணேஸின் பாடல்களுக்கு இணைப்பினைத் தந்திருப்பது, அவர்களின் திறமையும் சுயமும் ஈழத்துத்தமிழிசையிலே அவர்களுக்கான இடமும் பெரிதும் தெரியாமலே போய்விட்டது என்பதற்காக, அவர்களினைப் பற்றிய பதிவினை முழுமையடையச் செய்வதற்காகமட்டுமே. இப்பாடல்கள், தற்சமயம் இசைத்தட்டுகளிலே கிடைக்கின்றனவா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவ்வாறு அவை அவற்றின் பாடலுரிமை பெற்றோரினாலே விற்பனைக்கு இப்போது கிடைக்குமென்பது தெரியவரின், இப்பாடல்களை இணையத்திலிருந்து உடனடியே நீக்கி விடுவேன். கூடவே, அவை அவ்வாறு கிடைப்பின், அவ்விசைத்தட்டு குறித்த விபரம் தருகின்றவர்களுக்கும் நன்றியுடையோனாவேன்.

'05 மே 25, புத. 03:54

0 பின்னூடுகை:

Post a Comment

<< Home