Friday, May 20, 2005

சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

இரண்டு கிழமைகளுக்கு முன்னோர் இரவு, ஒரு கலிப்ஸோ இசைவட்டினைக் கேட்டுக்கொண்டிருந்தேன்; மீண்டுமொரு முறை "அப்பனில்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை; உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை" என்பது போல ஈழத்துப்பாடல்களின் தவனம் பிடரியிலே அடித்தது; அந்தக்காலத்திலே (1983 க்கு முன்னால்), இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே ஆசியசேவையை விட்டால், தமிழ்ச்சேவைகள் இரண்டு; சேவை ஒன்று, கர்நாடக சங்கீதம், சமயநிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்ச் போன்றவற்றினை நிரப்பிக்கொள்ளூம். சேவை இரண்டான வர்த்தகசேவையை பொதுவாகத் தமிழ்த்திரைப்படப்பாடல்களே ஏதோ விதத்திலே அடைத்துக்கொண்டிருக்கும்; சொல்லப்போனால், வார நாட்களிலே மத்தியானம், அரை மணிநேரம், ஹிந்திப்பாடல்கள் வேறு வர்த்தகசேவையிலுண்டு. இலங்கைப்பாடல்களென துள்ளிசைப்பாடல்கள் (இவை பைலாப்பாடல்களென்றும் பொப்பிசைப்பாடல்களென்றும் சுட்டப்பட்டன; Pop உம் Baila உம் வேவ்வேறு வகையென உணர்ந்தறியும் தன்மை எங்களிடம் இருக்கவில்லை) கிழமைக்கு ஓரிரு தடவைகள் கால்மணிநேரம் ஒலிபரப்பாகும். ஆனால், இவற்றினை ஒரு நாளும் நாங்கள் ஈழத்துப்பாடல்கள் என்ற உணர்வோடு பார்த்ததில்லை; இன்றைய காலகட்டத்தில், ஈழத்துப்பாடல்களென்றால், ஈழவிடுதலைப்பாடல்கள் என்ற அர்த்தத்திலே நோக்கப்படலாமென்றாலுங்கூட, ஈழத்துப்பாடல்களென்று எந்த முப்பத்தைந்து வயது தாண்டிய இலங்கையரையும் கேட்டாலும், 83 இற்கு முற்பட்ட காலகட்டத்திலே, காலை செய்தியறிக்கைக்குப் பின்னாலும், பொங்கும் பூம்புனலுக்கு முன்னாலும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தகசேவையிலே ஒலிபரப்பான, இலங்கையிலே இசையமைக்கப்பட்டு, இலங்கையராலே பாடப்பட்ட துள்ளிசையல்லாத தமிழ்மெல்லிசைப்பாடல்கள் என்றுதான் சொல்லக்கூடும். இரண்டு கிழமைகளுக்கு முன்னான இரவிலே இல்லாத என் அப்பனும் உப்புமானவை இவ்வகைப்பாடல்களே.

முன் & மத்திய எழுபதுகளின் ஸ்ரீமாவின் அரசு, அன்றைய சீன அரசினை அடியொற்றி நடக்க முயன்ற அரசு; சுய உற்பத்தி முன்னிலைப்படுத்தப்பட்டு, இறக்குமதி கிட்டத்தட்ட இல்லாத நிலை என்றே சொல்லலாம்; பிள்ளைக்குப் பால்மா தொடக்கம், பார்ப்பதற்குப் படம்வரைக்கும் உள்ளூரிலேயே பண்ணிக்கொள் என்பதான சூழல். தமிழ்நாட்டுப்பத்திரிகை தொடக்கம் படம் வரைக்கும் இந்த இறக்குமதித்தடை இருந்தது. (இந்தப்புத்தகத்தடையைத்தான் ஜெயமோகன் சில மாதங்களுக்கு முன்னால், வ. அ. இராசரத்தினம் பற்றிய பதிவுகள் தளக்குறிப்பினை ஒட்டி எழுதிய உயிர்மைக்குறிப்பிலே, ஒரு திரிபு திரித்து, "தமிழ்நாட்டு இலக்கியங்களை வேண்டுமென்றே தடை செய்தார்கள்" என்பதான தொனி விழ எழுதினார். அப்படியாக இந்தியாவினைக் குறிவைத்தேதும் தடை செய்யவில்லை என்று பதிவுகள் விவாதக்களத்திலே, எழுதியதை அவர் ஏற்றுக்கொள்ளாமல், "நான் உன்னோடு பேசவிரும்பவில்லை" என்று முகத்திலே அடித்துச்சொல்லிவிட்டுப்போனார். "இந்தியாவிலே அச்சடிக்கப்படும் வேற்றுநாட்டவரின் புத்தகங்கள் அல்லாத, இலங்கைத்தமிழ்ப்புத்தகங்களையோ அல்லது வேறு நாட்டிலே அச்சடிக்கப்பட்ட எந்த மொழிப்புத்தகத்தினையோ இன்றைக்கும் இறக்குமதி செய்ய அரசு சம்மதிக்குமா?" என்று அவரிடம் கேட்கவேண்டுமென்பதென் அவா.). இப்படியான நேரத்திலே, தன்னிறைவு நோக்கி, தமிழ்நூல்கள், தமிழ்ச்சஞ்சிகைகள், தமிழ்ப்பாடல்கள், தமிழ்த்திரைப்படங்கள் ஆகியன வெளிவர முயற்சித்தன.

பதிப்புலகில், அம்புலிமாமாவினை ஒற்றாத குறையாக நட்சத்திரமாமா சிறுவர்க்கு வெளிவந்தது; வீரகேசரிப்பதிப்பகம் மண்ணின் மணம் வீசும் நூல்களை வெளியிட்டது. அருள்சுப்பிரமணியம் (பின்னாலே, ஆனந்தவிகடன் மர்மநாவல் போட்டியிலே வென்று போட்டிவிதிகளை மீறியதற்காக, விலத்தப்பட்ட "அக்கரைகள் பச்சையில்லை"), அருளர் என்ற அருட்பிரகாசம் (M.I.A. வின் தந்தை; விடுதலைப்புலிகளை முன்னிறுத்தாத, விடுதலைப்புரட்சியாளர்களை முன்னிறுத்த விரும்பிய ஈழவிடுதலையின் அவசியத்தினைச் சுட்டும் "லங்காராணி"), ஞானசேகரன் ("குருதிமலை"),நந்தி, ஜோன் ராஜன் ("போடியார் மாப்பிள்ளை"), செங்கை ஆழியான் ("வாடைக்காற்று", "காட்டாறு"), பாலமனோகரன் ("நிலக்கிளி", "குமாரபுரம்"), தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் உட்பட பலரின் நூல்கள் வெளிவந்தன. மறுபுறம் வீரகேசரியின் பதிப்பாளர், தனது பரபரப்புப்பத்திரிகையான மித்திரனின் சார்பான 'ஜனமித்திரன்' பதிப்பகமூடாக, "பட்லி" (அதே சம்பல் பள்ளத்தாக்குக்கொள்ளைக்காரி - பாராளுமன்ற உறுப்பினர்-சூடு-சா அவரேதான்), "ஜமேலா", கோவூரின் "கோர இரவுகள்" போன்ற நூல்களையும் வெளியிட்டது; 'சிரித்திரன்' சஞ்சிகை நகைச்சுவைக்கென்றே MAD சஞ்சிகை வகையிலே வெளிவந்தாலுங்கூட, நல்ல ஆழமான படைப்புகளைத் தந்திருக்கின்றது. வாழ்க்கைநடைமுறையினைப் பகிடியாக யாழ்ப்பாணச்சுடலைப்பேய்ச்சமூகத்தினை உருவாக்கிச் செங்கை ஆழியான் எழுதிய "கொத்தியின் காதல்" அருமையான எள்ளற்படைப்பு. சின்னக்குட்டி, மிஸஸ். டாமோடிரன், மெயில்வாகனத்தார், ஸ்ரீமான் செல்லக்கிளி போன்ற அருமையான கேலிச்சித்திரப்பாத்திரங்களை சிவஞானசுந்தரம் தந்தார். இடதுசாரி எழுத்தாளர்கள், செ. யோகநாதன், செ, கணேசலிங்கன் ஆகியோரும் எழுதினார்கள். (கணேசலிங்கனின் குமரன் பதிப்பகம் இவற்றினை வெளியிட்டதா என்று ஞாபகமில்லை). தவிர, டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை', அ. யேசுராசா, மு. புஸ்பராஜன் ஆகியோரின் ' அலை' போன்ற இதழ்களும் வந்துகொண்டிருந்தன.

இந்தக்காலத்திலே வந்த இலங்கைத்திரைப்படங்கள் வெவ்வேறு தரங்களிலேயிருந்தன. வானொலி நாடகங்களாக வந்த கோமாளிகள், ஏமாளிகள் போன்ற "carry on boys" வகையான நகைச்சு-வை-ப்படங்களைவிட்டால், மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதி கணேசன் (இவருடைய மகன் தற்போதைய கொழும்பு அரசியல்வாதி மனோ கணேசன்), எம்ஜிஆர் படங்களினை அப்படியே ஆடல், பாடல், கதை, காட்சியமைப்பு ஆகியவற்றிலே ஒற்றியெடுத்து, "நான் உங்கள் தோழன்", "நாடு போற்ற வாழ்க" ஆகிய படங்களை எடுத்தார். யார் அவள் போன்ற படங்கள் ஒரு புறம். கொஞ்சம் மாற்றத்தினைக் கொண்டு வர, பொன்மணி, தென்றலும் புயலும், வாடைக்காற்று ஆகிய படங்கள் வந்தன. பொன்மணி, சிங்கள இயக்குநர், தர்மசேன பத்திராஜாவின் இயத்திலே வந்தது; பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி நடித்துமிருந்தார். தென்றலும் புயலும் முழுக்க முழுக்க, திருகோணமலையிலேயே வேதநாயகம் என்பவராலே, வங்கியிலே வேலைசெய்த சிவபாதவிருதயர், அமரசிங்கம் நடிக்கத் தயாரிக்கப்பட்டது. வாடைக்காற்று, நெடுந்தீவு மீனவர்களின், அங்கு காற்றுக்காலத்துக்கேற்ப வந்துபோகும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட, செங்கை ஆழியானின் கதையை முன்வைத்து, ஏ. ஈ. மனோகரன், சந்திரகலா முதன்மைப்பாத்திரங்களிலும் இந்திரகுமார் (இவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு என்ற நூலை எழுதியவரென்று நினைக்கிறேன். தற்போது, இலண்டனிலே இருக்கின்றார்; டயானாவின் மரணம் பற்றியொரு நூல் எழுதினார் என்றும் அறிகிறேன்), தற்போது, இலண்டனிலே கணவர் பாலேந்திராவோடு அவைக்காற்றுக்கழகம் நாடக அமைப்பினை நடத்தும் ஆனந்தராணி, இப்போது கனடாவிலே நாடகங்கள்போடும் கே. எஸ். பாலச்சந்திரன், ஜவஹர் ஆகியோரைத் துணைப்பாத்திரங்களிலே கொண்டு வெளிவந்த படம். இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து, தம்பிஐயா தேவதாஸின் நூல் ஒன்று வெளிவந்திருப்பதாக அறிகிறேன். இணையத்திலும் தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து நல்லதொரு வரலாற்றுப்பதிவொன்றைத் தந்திருக்கின்றார்.

0 பின்னூடுகை:

Post a Comment

<< Home