Thursday, July 07, 2005

சந்தனமேடை எம் இதயத்திலே... - 3

சந்தனமேடை எம் இதயத்திலே... - 3
சந்தனமேடை எம் இதயத்திலே... 1
சந்தனமேடை எம் இதயத்திலே... 2



முதலிரண்டு பகுதிகளினை நான் எழுத முயலவில்லை; நான் ஆரம்பத்திலே குறிக்க எண்ணியதெல்லாம் எனக்குப் பிடித்த சில ஈழத்துப்பாடல்கள் ஏற்படுத்திய தவனத்தினைத்தான். பரராஜசிங்கம்-குலசீலநாதன் இருவரும் கூடிப்பாடிய "சந்தனமேடை எம் இதயத்திலே உன் சலங்கையின் நாதந்தான் கேட்குதடி" என்ற பாடலும் "அழகான ஒரு சோடி கண்கள்" பாடலும் "குளிரும் நிலவினிலே" பாடலும் நெடுங்காலத்தவனம் தந்தவை. எம். ஏ. குலசீலநாதனே இசையமைத்த "சந்தனமேடை எம் இதயத்திலே" ஆரம்பத்திலே ஒரு காதற்பாட்டு என்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்; பின்னர், பல்கலைக்கழகக்காலத்திலே நண்பன் ஒருவன் சுட்டிக்காட்டியபின்னாலேதான் அது சரஸ்வதி குறித்த பாடலென்று புலனானது. எம். ஏ. குலசீலநாதன், எஸ். கே. பரராஜசிங்கம் இருவருமே மரபுவழிச்சங்கீதப்பரீட்சயம் உள்ளவர்களென்று நினைக்கிறேன். (பரராஜசிங்கம் மலேசியாவைச் சேர்ந்தவர், இலங்கை வானொலிக்காலத்துக்குப்பின்னால், திரும்ப மலேசியா சென்றுவிட்டார் என்பதாக எங்கோ வாசித்தேன். நிச்சயமாகத் தெரியவில்லை. மேலதிக விபரம் தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்). குலசீலநாதன் சென்ற ஆண்டு பரிஸிலே மறைந்துவிட்டார். அதுபோல, "அழகான ஒரு சோடி கண்கள்" பாடசாலையிலே (சக மாணவி)கண்(/காதல்) வசப்படும் ஒரு மாணவன் அவள் கண்களைச் சுட்டும் வார்த்தைகளாக விழுவன. ஒவ்வொரு பாடநேரத்திலும் படும் இவன் துடிப்பினைச் சுட்டும் பாடல். மிகவும் அழகான சொல்லமைவும் இன்றைய காதற்பாடல்களிலே காணமுடியாத நாகரீகமும் நிறைந்த பாடல்.

"குளிரும் நிலவினிலே" என்னைப் பிடித்துக்கொண்டதன் காரணம் அந்தப்பாடலுக்குரிய கனத்தினையும் மெலிதான கரகரப்பினையும் கொடுக்கும் பரராஜசிங்கத்தின் குரல். சில பாடல்களைக் கேட்கும்போது, சில இடங்களும் காலமும் ஞாபகத்துக்கு வருவதுண்டு; பல சமயங்களிலே அந்நிலை ஏன் என்று தெரிவதில்லை; அப்படியான விசித்திரமான உணர்வினைத் தரும் பாடல்களிலே இதுவுமொன்று. திருகோணமலை - தொண்டமானாறு பேரூந்திலே இரவு ஏழு-ஏழரை அளவிலே பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை முடிந்து ஆனையிறவு உப்பளம் தொடங்கும் இடத்திலே பயணிக்கும் சூழலும் வழித்தடத்திலே சுற்றி வீடுகளிலே தெரியும் மங்கலான விளக்குவெளிச்சமும் பனையோலைகள் உராயும் சத்தமும் இந்தப்பாடலைக்கேட்கும்போதெல்லாம் எனக்கு உணர்வாகும். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கையிலிருந்து சீனா நான் பயணமாகும்போது, ஒரு மாலைநேரம் இசைநாடாவொன்றிலே நானும் தங்கையும் இப்பாடலின் கூறொன்றை இலங்கைவானொலியிலிருந்து கௌவிப்பிடித்தோம். வெகுகாலம் வீட்டுநினைவிலே சீனாவிலே இப்பாட்டின் ஒரு நிமிட இரைச்சலுடனான பதிவினைக் கேட்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளின் முன்னால், கனடாவின் அருவி வெளியீட்டகம், எஸ். கே. பரராஜசிங்கத்தின் பாடல்களை "குளிரும் நிலவு" இசைவட்டாக வெளியிட்டதினை அருவியின் தளத்திலே கண்டிருந்தேன். அந்நேரத்தில், வாங்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டவில்லை. பின்னால், அவர்களின் தளமும் அற்றுப்போய்விட்டது. ரொரொண்டோ போய்வந்த/வசிக்கும் நண்பர்களிடம் "ஈழத்துப்பாடல்கள்" பற்றிச் சொல்லிவிட்டபோது, அவர்களால், பொப்பிசைப்பாடல்களையே பெறமுடிந்தது. ஈழத்துப்பாடல்கள் என்ற வகைப்பட்ட இந்தப்பாடல்கள் கிட்டவில்லை. அண்மையிலே மேற்படி தவனம் பற்றிய முதலிரு குறிப்புகள் எழுதியதின்பின்னால், பத்மநாப ஐயர் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்தபோது, கொண்டு வந்த இசைவட்டுகளிலே "குளிரும் நிலவு" கிடைத்தது. "காஞ்ச மாடு கம்பில விழுந்ததுமாதிரி" போட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மேற்கூறிய மூன்று பாடல்கள் தவிர்ந்த மேலும் ஒன்பது பரராஜசிங்கம் இயற்றிய பாடல்களை அருவி இத்தட்டிலே சகாப்தனின் எஸ். கே. பரராஜசிங்கம் குறித்த அறிமுகத்துடன் தந்திருக்கின்றது.



1. அறிமுகம் - சகாப்தன்
2. தென்னை மரத்து - நாட்டார் பாடல்; இசை: எம். கே. ரொக்சாமி
3. சந்தனமேடை - எம். ஏ. குலசீலநாதனுடன்; பாடல்: என். சண்முகலிங்கம் & இசை: எம். ஏ. குலசீலநாதன்
4. வெள்ளிதழ் மல்லிகை - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
5. குளிரும் நிலவில் - பாடல்: என். சண்முகலிங்கம் & இசை: சொலையில் ரானா
6. அழகான ஒரு சோடி - பாடல்: பாவலர் பாசில் காரியப்பர்; இசை: எம். கே. ரொக்சாமி
7. நெஞ்சினில் ஊறும் - கோகிலா சிவராஜாவுடன்; பாடல்: கே. கே. மதிவதனன் & இசை: எம். கே. ரொக்சாமி
8. கிண்ணி போல் - நாட்டார் பாடல்; இசை: எம். கே. ரொக்சாமி
9. பாலைவெளி - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
10. கண்ணனின் கோயிலிலே - பாடல்: என். சண்முகலிங்கம்; இசை: கண்ணன் - நேசம்
11. கங்கையாளே - கோகிலா சிவராஜாவுடன்; பாடல்: இ. முருகையன்; இசை: எம். கே. ரொக்சாமி
12. மணிக்குரல் - பாடல்: அங்கையன் கைலாசநாதன்; இசை: சிட்டிபாபு
13. உழைக்கும் கரங்கள்- பாடல்- ரி. பரமலிங்கம்; இசை: ரி. வி. பிச்சையப்பா

இவர்களிலே, எம். கே. ரொக்சாமி தமிழிலும் சிங்களத்திலும் கோலோச்சிய இசையமைப்பாளர். கண்ணன் - நேசம் இரட்டையர் யாழ்ப்பாணத்திலே மிகவும் அறியப்பட்ட இசையமைப்பாளர்கள். கண்ணன் இன்னமும் ஈழத்தமிழிசைக்குத் தன் பங்களிப்பினைத் தந்துகொண்டிருப்பவர். ரி. வி. பிச்சையப்பா, ஸ்ரீதர் பிச்சையப்பா என்று தொண்ணூறுகளிலே தென்னிந்தியத்திரைப்படப்பாடற்பாணியிலேயே இலங்கையிலே பாடியவரின் தந்தை. "கங்கையாளே" என்று மகாவலிகங்கை குறித்த பாடல் எழுதிய முருகையன், மஹாகவி உருத்திரமூர்த்தியின் சமகாலமொத்த ஈழத்தின் மூத்த கவிஞர். கைலாசபதியுடன் "கவிதைநயம்" நூல் எழுதியவர். "பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்", "மரணத்துள் வாழ்வோம்" இவற்றிலே இவரின் கவிதைகளைக் காணலாம்.

அருவி போன்ற வெளியீட்டகங்களின் இப்படியான பாடல் வெளியீடுகள், ஈழத்தின் பண்பாட்டுக்கூறுகளை ஆவணப்படுத்தவும் எதிர்காலத்துக்குத் தன்னியல்போடு வேற்று நல்லியல்புகளையும் உள்வாங்கி நடக்க உதவுமென்பது என் நம்பிக்கை.

உதாரணச்சுவைக்காக இவ்விசைத்தட்டின் ஒவ்வொரு பாடலினதும் மிகச்சிறிய துண்டத்தினை இணைத்திருக்கிறேன். அதிலே அருவி வெளியீட்டகத்துக்கு மறுப்பிருக்குமானால், உடனடியாக நீக்கிவிடுவேன்.

this is an audio post - click to playஅறிமுகம் & முதல் நான்கு பாடல்கள்




'05 ஜூலை, 07 வியா. 18:35 கிநிநே.

"குளிரும் நிலவு"
வெளியீடு: அருவி வெளியீட்டகம்
வெளியீட்டு ஆண்டு: 1999
தொடர்பு முகவரி: 75 Brimley Road, Scarborough, Ontario, Canada
தொடர்பு தொலைபேசி: (416) 269-1701



6 பின்னூடுகை:

Anonymous Anonymous said...

இன்று காலையில் தான்
வலைப்பதிவ கடலில்
முதல் முதலாக
பார்தேன்.
அப்படி பார்தததற்கு காரணம்
பிறகு

சந்தோஷம் தாங்க முடியவில்லை!
அந்த குளிர் நிலவை நானும்தான் வாங்கினேன்.
காலத்தால் எங்கோ காணாமல் போய் விட்டது. ஒரு பண்டம் என்ற முறையில்.
காலத்தால் அழியாத அதன் பாடல்களை பற்றிய ஏக்கம்
சதா காலம்
எனக்குள்.

ஒலிநாடா
காலம் மரணித்து விட்டது.
cdயில்
அந்தப் பாடல்கள் தேவை.
மனம் அடம் பிடிக்கிறது.
வழிச் சொல்லுங்கள்.

சிறு சிறு துண்டங்காளக போட்டும்
ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் பற்றிய ஒரு வலைப் பதிவை ஆரம்ப நிலையில் ஆரம்பித்த
வைத்து ஈழத்து மெல்லிசைப் பாடல்களை பற்றி பேச போகிறோம்
என்ற எனது கர்வத்திற்கு அடி தந்த
உங்களுக்கு நன்றிகள். !!!

9:14 PM  
Blogger -/பெயரிலி. said...

அன்பின் மேமன்கவி,
வணக்கம். இருபது இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், மல்லிகையிலும் மற்றைய இலங்கைச்சஞ்சிகைகளிலும் பார்த்ததற்கு உங்கள் முகம் இப்போது படத்திலே மிகவும் மாறுதலாகத் தெரிகிறது. ஐந்துலாம்புச்சந்தியும் மேத்தாதாசன் போன்றோரை நீங்கள் இலங்கைக்கும் வரவேற்று உபசரித்ததும்கூட.

இக்குறுவட்டு பத்மநாப ஐயர் எனக்குத் தந்துதவியது. கனடாவிலே மேலே தந்திருக்கும் முகவரியிலே வெளியிட்டதாகத் தெரிகிறது. இணையத்துக் கனடிய நண்பர்கள் உறுதியாக எங்கே கிடைக்கலாமெனக் கூறமுடியுமென நினைக்கிறேன்.

9:28 PM  
Anonymous Anonymous said...

ஐயோ!
இப்போ cd யை
பெறும் ஆவலுடன்
நீங்கள் யார் என்று
தெரிந்துக் கொள்வதில்
மனம் துடிக்கிறது.
சொல்லுங்களேன் please!!!!!!

12:41 AM  
Blogger -/பெயரிலி. said...

திரு. மேமன்கவி,
சொல்லி அறிந்து கொள்ளுமளவுக்கு என்னை உங்களுக்குத் தெரியாது. வாசகனாக நீங்கள் எழுதியவற்றை எண்பதுகளிலும் தொண்ணூறிலும் வாசித்திருக்கிறேன். அவ்விதத்திலேதான் உங்களைத் தெரியும்.

12:47 AM  
Anonymous Anonymous said...

அடக்கமாகவும் நியாமான காரணத்துடனும்
உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள்.
அது போதும் எனக்கு.

@இன்று காலையில் தான்
வலைப்பதிவ கடலில்
முதல் முதலாக
பார்தேன்.
அப்படி பார்தததற்கு காரணம்
பிறகு@

இப்பொழுது சொல்கிறேன்.
வலைப் பதிவுத் தளத்தில் பரீட்சார்த்மாக
புனைவு எனும் பேரில் ஓரு சஞ்சிகை மாதாரியான
ஒன்றை தொடங்கலாம்
என்று எண்ணி
யுனிக்கோட் தந்த வரத்தால் புனைவு
என அடித்து தமிழில் தேடினேன்.
வேறு யாராவது அந்த பேரில் ஏதாவது
செய்து இருக்கிறார்களா?என பார்த்தேன்.
உங்கள் பக்கங்கள் அகப்பட்டன.

உங்கள் பக்க தலைப்புக்களும்
அவையின் உள்ளடக்கங்களும்
என்னை நிமிரந்து
உட்கார வைத்தன.
எனது விருப்பத் தேர்வில் சேர்ந்துக் கொண்டேன்.

தொடர்ந்து பக்கங்களில் வலம் வந்து
எனது கருத்துக்களை
முன் வைக்கிறேன்.

எனது வலைப் பதிவுகளைப் பார்த்து
உங்கள் ஆழமான கருத்துக்களை.

எனைப் பற்றிய
ஞாபகங்களை
இவ்வளவு காலம்
பத்திரப்படுத்தி வைத்தமைக்கு
என் மனமார்ந்த நன்றிகள்!!!
தொடர்வோம்
நேசத்தை
நேசங்களுடன்
மேமன்கவி

1:10 AM  
Blogger தமிழ்நதி said...

இருந்திருந்து விட்டு ஒரு தவனம் வரும். இன்று 'குளிரும் நிலவினிலே'கேட்டால்தான் நித்திரை கொள்ள முடியும் போல ஒரு அருட்டல். முன்பு உங்கள் பக்கத்தில் கேட்ட ஞாபகம். ஆனால், உங்கள் பக்கத்தில் புகுந்து கண்டுபிடித்து வெளிவருவது சிரமம்.கூகுல் ஆண்டவரிடம் கேட்டேன். வழிகாட்டியிருக்கிறார். பதிவிட்ட உங்களுக்கு நன்றி.

10:23 AM  

Post a Comment

<< Home